இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு

India not in community transmission stage of coronavirus, Centre clarifies again டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய் தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நோயைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமலாக்கப்பட்டிருக்கிறது. இன்று 6-வது நாளாக லாக்டவுன் நீடித்து வருகிறது.

இருப்பினும் பல இடங்களில் லாக்டவுனை முழுமையாக ஏற்று பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கவில்லை. பல்வேறு காரணிகளை முன்வைத்து வீதிகளில் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா தொற்று நோயின் தாக்கமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் 29 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தாக்கம், சமூகப் பரவல் எனும் நிலையை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது ஒருவரிடம் மற்றொருவருக்கு பரவுகிற நிலையில்தான் இருக்கிறது.

இது இன்னமும் சமூகப் பரவல் என்கிற நிலையை எட்டவில்லை. அப்படியான ஒரு நிலை உருவானால் அரசு அதை வெளிப்படையாகவும் அறிவிக்கும். ஆகையால் சமூகப் பரவல் ஏற்படாமல் இருக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி இந்தியாவில் 3-வது கட்டமாக சமூகப் பரவல் நிலை உருவாகிவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போதும் இதை மத்திய அரசு மறுத்திருந்தது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மீண்டும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது.

Comments