
கொரோனா ரணகளத்துக்கு இடையே கே.பி.ராமலிங்கம் பதவி பறிக்கப்பட்டதற்கான பின்னணி பற்றி விசாரித்தால், தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிடுபவரை கட்சியில் ஏன் வைத்திருக்க வேண்டும் என பதில் கிடைத்தது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ராமலிங்கம்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தொடக்கம் முதலே மு.க.அழகிரியின் ஆதரவாளராக தன்னை காட்டி வந்த ராமலிங்கம், அழகிரி மீதான கட்சி நடவடிக்கைகளுக்கு பிறகு சற்று அடங்கி ஒடுங்கி நடக்கத் தொடங்கினார். அதற்கு முன்னர் வரை ஆரவாரமாக அழகிரி புராணத்தை பாடி அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்.
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்காக கருணாநிதியிடம் பரிந்து பேசச் சென்று வாங்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவர் கே.பி.ராமலிங்கம். ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலினுடன் கருத்து வேறுபாட்டுடன் இருந்த இவர், கால ஓட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி ஒத்த கருத்துடைய கட்சி நீரோட்டத்தில் ஐக்கியமானார். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் மீண்டும் மாற்றம் தென்படத் தொடங்கியது. காரணம் மீண்டும் மாநிலங்களவை சீட் எதிர்பார்த்த ராமலிங்கத்துக்கு ஸ்டாலின் சீட் கொடுக்காததால் மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்கினார் ராமலிங்கம்.
இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார் கே.பி.ராமலிங்கம்.
Comments