கொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்

CoronaLockdown: SC seeks report from Centre on migration of workers டெல்லி: கொரோனாவால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 6-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வாழ்வாதாரங்கள் இல்லாத நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து பல லட்சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினர். இதனால் லாக்டவுன் நடைமுறைப்படுத்துவது என்பதே பெரும் கேள்விக்குறியானது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே தங்களது சொந்த மாநிலங்களுக்கும் திரும்பினர். நாடு முழுவதும் இது பெரும் விவாதங்களையும் கவலையையும் உருவாக்கி உள்ளது. இதனிடையே தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அலாக் அலோக் ஶ்ரீவத்சவா மற்றும் ராஷ்மி பன்சால் ஆகியோர் தாக்கல் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது கொரோனா வைரஸ் பரவலை விட பல லட்சம் தொழிலாளர்களின் இடப்பெயர்வு மிக முக்கியமானதாகி உள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொழிலாளர்களின் இடப்பெயர்வுகளை நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனையடுத்து தொழிலாளர்கள் இடப்பெயர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments