
முதலில் ஈரான் இதை மறுத்து வந்தது. அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த விபத்து. எங்கள் மீது புகார் கூற வேண்டாம். எங்கள் மீது பழி போட வேண்டாம் என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது.
இந்த நிலையில் இது விபத்து கிடையாது. ஈரான் தாக்குதலால்தான் விமானம் விழுந்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. உக்ரைன் விமானம் ஏவுகணை மூலம்தான் தாக்கப்பட்டது. அது விபத்து கிடையாது. அது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை வெளியிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
நாங்கள் ஆதாரத்தை வெளியிட்டால் எல்லாம் மாறும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அவர் என்ன ஆதாரம் என்று வெளிப்படையாக குறிப்பிடவில்லை. என்ன மாதிரியான ஆதாரங்களை அவர் வைத்து இருக்கிறார். எப்படி அவருக்கு அந்த ஆதாரம் கிடைத்தது. அவர் வெறும் பொய் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுந்தது.
அதே சமயம் இன்னொரு பக்கம் ஈரான், உக்ரைன் விமானத்தை தாக்கி அழித்தது தொடர்பாக வீடியோ ஆதாரம் வெளியானது. அந்த வீடியோவில் விமானம் தானாக விழவில்லை. விமானம் கீழே விழுவதற்கு முன் சிறிய ஒளி கீற்று அதை போய் மோதியுள்ளது. ஈரான் செலுத்திய ஏவுகணைதான் இந்த ஒளி கீற்று. மொத்தமாக விமானத்தை அந்த ஏவுகணை தாக்காமல் உரசி சென்றுள்ளது. இதனால் அதன் எஞ்சின் தீ பிடித்து வெடித்து உள்ளது. இதன்பின் விமானம் கீழே விழுந்து சிதறி உள்ளது வீடியோ மூலம் உறுதியானது.
அதேபோல் தொழில்நுட்ப ரீதியாக தங்களிடம் சில ஆதாரம் இருக்கிறது என்று கனடா குறிப்பிட்டு இருந்தது. இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக கனடா மக்கள் 63 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை கனடா தீவிரமாக விசாரிக்க உள்ளது.
இப்படி கனடா, அமெரிக்கா இரண்டும் சேர்ந்து வந்தது ஈரானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கு நிறைய ஆதாரங்கள் சேர்ந்ததுதான் ஈரானின் மன மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். முதலில் உக்ரைன் விமானம் விழுந்தது வெறும் விபத்து என்று கூறிய ஈரான் கடைசியில் பல்டி அடித்து உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.
Comments