முடிகிறதா தேனிலவு?: பாஜ - அதிமுக உரசல்

சென்னை: அதிமுக மற்றும் பா.ஜ., இடையே சுமூகமாக இருந்த கூட்டணியில், சமீப நாட்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் இருந்து, தமிழக அரசை முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.,மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா.ஜ., தனித்து போட்டியிட்டிருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், நாங்கள் போட்டியிட விரும்பிய அளவிற்கான பதவி, இடங்கள் கிடைக்கவில்லை எனக்கூறியிருந்தார்.

இரு கட்சிகளிலும் முதலி்ல் கொளுத்திப் போட்டவர் இவர் தான். அதன் பிறகு பிரச்னை பற்றிக்கொண்டது.

பதிலடி

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு கட்சியின் தனி பலம் தெரியவரும் என்றார்.

யார் கருத்து

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பொன்ராதாகிருஷ்ணன் கருத்து, அவருடைய கருத்தா? கட்சியின் கருத்தா? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோல பேசுவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல' என்றார்.

பயங்கரவாதிகள் கூடாரம்

இதனிடையே அரியலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையை செய்ய துவங்கியிருக்கின்றனர். திமுக கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது என்பதை ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே கூறி வருகிறேன். கேரளா, குஜராத், டில்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது எனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

கோபம் ஏன்

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தாம் சார்ந்த கட்சியில் பதவி கிடைக்காத கோபத்தை எங்கள் மீது பொன்.ராதாகிருஷ்ணன் திருப்புவது ஏன்? மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில், அவரின் கருத்து ஏற்புடையது அல்ல. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், தமிழக அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பா.ஜ., அரசை எதிர்க்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படி மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்வது, கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சத்தை அக்கட்சியினருக்கு ஏறு்படுத்தி உள்ளது.

Comments