ஜும்மா மசூதி முன் போராடினால் என்ன பிரச்னை? டில்லி போலீசுக்கு நீதிபதி கண்டனம்

JamaMasjid,Delhi_police,court,Judge,ஜும்மா_மசூதி,நீதிமன்றம்,கண்டனம்புதுடில்லி : 'ஜும்மா மசூதி, இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. அது, பாகிஸ்தானில் இருப்பதை போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள். அங்கு போராடினால், உங்களுக்கு என்ன பிரச்னை? போராட்டம் நடத்துவது, ஜனநாயக நாட்டில் தவறில்லை' என, டில்லி போலீசாருக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுதும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டில்லி ஜும்மா மசூதி முன், போராட்டம் நடத்திய போது, 'பீம் ஆர்மி' என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், கடந்த மாதம், 21ல் கைது செய்யப்பட்டார்.

உரிமை உள்ளது

அவரது ஜாமின் மனு, டில்லி நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லாவு கூறியதாவது:போராட்டம் நடத்துவது, ஜனநாயக உரிமை. மக்கள் அமைதியாக போராடுவதில், உங்களுக்கு என்ன பிரச்னை. பார்லிமென்ட் முன் போராடிய பலர், தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் பிற்காலத்தில் வளர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சந்திரசேகர் ஆசாத், ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி; போராட, அவருக்கு உரிமை உள்ளது.ஜும்மா மசூதி, டில்லியில் தான் உள்ளது. அது, பாகிஸ்தானில் இருப்பதை போல, ஏன் நடந்து கொள்கிறீர்கள்.

ஜும்மா மசூதி முன் பேராட்டம் நடத்தக்கூடாது என, சட்டம் இருந்தால், அதை காட்டுங்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மக்கள் அறிய வேண்டிய தகவல்கள், முறைப்படி பார்லிமென்டில் சொல்லப்படவில்லை. எனவே தான், மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

அவகாசம் வேண்டும்

இதையடுத்து, 'ஜும்மா மசூதி முன் நடந்த பேராட்டத்தின் போது, சந்திரசேகர் ஆசாத் வன்முறையை துாண்டும் விதமாக செயல்பட்டார்.'அதற்கான, 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளன. அதை சேகரிக்க அவகாசம் வேண்டும்' என, அரசு தரப்பு வாதிட்டது. இதையடுத்து, 'எல்லா வழக்கிலும், ஆதாரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் சமர்ப்பிக்கும் அரசு தரப்பு, போராட்டம் தொடர்பான வழக்கில், ஆதாரங்கள் திரட்ட, ஏன் இவ்வளவு திணறுகிறது' என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Comments