
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, உள்ளிட்ட அமைப்புகளில் அதிகளவில் பெண்கள் பதவிக்கு வரமுடியும் என சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் மகளிரணி வலுவாக உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்டச் செயலாளர்களும், லோக்கல் நிர்வாகிகளும் பெண்களுக்கான கோட்டாவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை போட்டியிட வைக்க முயற்சிப்பதால் மகளிரணியினர் இது தொடர்பான புகாரை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் தரப்பை தொடர்பு கொண்ட அதிமுக தலைமை, மகளிரணியில் தகுதி பெற்ற வேட்பாளர்கள் இருந்தால் புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்குமாறும், அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறும் சமாதானம் செய்து வைத்திருக்கிறது.
Comments