நான் ராகுல் காந்தி... ராகுல் சாவர்க்கர் அல்ல! ராகுல் பேச்சு

மன்னிப்பு கேட்கமாட்டேன் டெல்லி: சரியாக பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் ராகுல் காந்தி... ராகுல் சாவர்க்கர் அல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மேட் இன் இந்தியா என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கோஷம் என்ற போதிலும் இப்போது ரேப் இன் இந்தியா என்பது நாட்டின் நிலைமை ஆகிவிட்டது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனது பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு அது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக "தேசத்தை காப்போம்" என்ற தலைப்பினாலான பேரணிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில் நாட்டில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன என உண்மையான கருத்தை நான் பேசியதற்கு என்னை மன்னிப்பு கேட்க பாஜகவினர் கூறுகின்றனர். எனது பெயர் ராகுல் சவார்கர் இல்லை, நான் ராகுல் காந்தி. உண்மையை பேசியதற்கு நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்று 4 சதவீதமாக உள்ளது. அதுவும் ஜிடிபியை கண்டறிவது குறித்து கணக்கிடும் முறையை மாற்றிய பிறகு. இதே முன்பு கணக்கிடும் முறையை பயன்படுத்தி ஜிடிபியை கண்டறிந்திருந்தால் அது வெறும் 2.5 சதவீதம்தான் இருந்திருக்கும்.

நாட்டு மக்களுக்கு இன்றைய நிலை தெரியும். பிரிவினையை உருவாக்க பாஜகவினர் பணியாற்றுகின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மத ரீதியிலான பிரிவினையை உருவாக்க முயல்கிறார்கள். மோடிஜி அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பாருங்கள். அந்த பகுதியை எப்படி பற்றி எரிய வைத்துள்ளீர்கள் என்பது தெரியும் என்றார்.

Comments