பினராயி விஜயன் அதிரடி.. குடியுரிமை சட்ட திருத்தம்.. திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபை தீர்மானம்!

Kerala CM Pinarayi Vijayan Moves Resolution Demanding Withdrawal Of CAA In Assembly திருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. ஆகியவற்றை தங்களது மாநிலங்களில் அமல்படுத்தப்போவது இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று, சி.ஏ.ஏ.வை வாபஸ் பெறக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது பேசிய பினராயி விஜயன், மதச்சார்பின்மையை பன்னெடுங்காலமாக பாதுகாத்து வருகிறது கேரளா.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலரும் இந்த நிலத்துக்கு வந்துள்ளனர். வரலாற்று தொடக்க காலங்களிலேயே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கேரளாவுக்கு வருகை தந்தவர்கள். இந்த மரபார்ந்த சூழ்நிலையை பாதுகாக்க விரும்புகிறோம் என கூறினார்..

இத்தீர்மானத்துக்கு சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன. பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ. ராஜகோபால் இத்தீர்மானத்தை எதிர்த்தார்.

முன்னதாக பினராயி விஜயன் தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கேரளா மக்கள் நிராகரிக்கின்றனர். இச்சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள், மத பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வலிமையான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனடிப்படையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வலிமையான அணி ஒன்றை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

Comments