கமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்!

அவசியமில்லை சென்னை: கமல் போஸ்டர் மீது சாணியடித்துள்ளதாக பேசியது குறித்து நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் லாரன்ஸ் முழுக்க முழுக்க அரசியல் பேசி பரபரப்பை கிளப்பினார்.

சிலர் அரசியல் நாகரிகமே இல்லாமல் பேசுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பெயரை குறிப்பிடாமல் அவரது பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய லாரன்ஸ், சிறுவயதில் கமல் படத்தின் போஸ்டர்கள் மீது சாணியடித்ததாகவும் தனது பேச்சில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டார். இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல் சார் படத்தின் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன் என்று பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் முழு வீடியோவை பார்த்தால், சிறுவயதில் நான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகனாக இருந்திருக்கிறேன். விபரம் தெரியாமலேயே கமல் சாருக்கு எதிராக இருந்திருக்கிறேன். மேலும், தற்போது ரஜினி மற்றும் கமல் சார் கைகோர்த்துள்ளது எவ்வளவு மகிழ்ச்சி அளித்துள்ளது என்று பேசியிருக்கிறேன்.

கமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் ஏதும் தவறாக பேசியிருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுவிடுவேன். முழு வீடியோவையும் பார்த்தால், நான் அவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது உங்களுக்கு புரியவரும்.

சிலர் திட்டமிட்டு எனது பேச்சை திசை திருப்பி வருகின்றனர். என் இதயத்தில் இருந்து கமல்ஹாசனை எப்படி மதிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதனை யாருக்கும் நிரூபிப்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழே உள்ள லிங்கை பாருங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments