ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?

3,000-க்கும் அதிகமானோர் போலி கணக்குகள்நாடு முழுக்க குழந்தைகள் ஆபாச வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும் அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட 60 பேருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. அதிலும் அதிக குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் திருச்சியிலிருந்து வெளியானதாகவும் நம்பதகுந்த தகவல் பரவியது.

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக தற்போது நாகர்கோவிலில் பணி புரிந்து வருகிறார்.

இவர் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதையே வேலையாக கொண்டிருந்தார். அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தும், அதனை தனது நண்பர்கள் உள்பட பலருக்கும் பகிர்ந்து வந்துள்ளார். இதுகுறித்து திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது அடையாளத்தை மாற்றி, பல்வேறு புனை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். அதில் நிலவன், ஆதவன், வளவன் ஆகிய பெயர்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டுருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஊடகவியல் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி வந்த கிறிஸ்டோர் அல்போன்சை இன்று கையும்களவுமாக கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் போலி கணக்குகளில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். முதல்கட்டமாகத் திருச்சியில், குழந்தைகள் வீடியோக்களை வெளியிட்டதாகச் சந்தேகப்படும் 60 பேரின் ஐ.பி முகவரியைக் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளூர் போலீஸுக்கு அனுப்பியுள்ளது.

Comments