
டெல்லி திஹார் சிறையில் 106 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த ப.சிதம்பரம் இன்று சிவகங்கைக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த அவர் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வழியாக சிவகங்கை சென்றார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், மத்திய அரசு போண்டியாகி விட்டதாகவும், பணம் இல்லாததால் மக்களுக்கு ஆட்சியாளர்களால் எதுவும் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு கூலித் தொழிலாளிகளுக்கு மாதம் 23 நாட்கள் வரை வேலை கிடைத்தாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அன்றாட கூலித் தொழிலாளிகளுக்கு மாதம் 12 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே வேலை கிடைப்பதாகவும் தெரிவித்தார் ப.சிதம்பரம்.
ரயில்வேதுறையை தனியார்மயமாக்க நீண்ட நாட்கள் ஆகும் எனவும், ஆனால் அதுவரை பாஜக ஆட்சியில் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையை உலக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியும் அதனை திருத்திக்கொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவில்லை எனக் கூறினார்.
Comments