குடியுரிமை திருத்த சட்டம்.. தீவிரமாக கையில் எடுத்த திமுக.. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

DMK announces district wise protests against CAB on December 17 சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மாவட்ட அளவில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் சமீபத்தில் லோக்சபை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத சில கட்சிகளும் ஆதரவு அளித்ததால், இந்த சட்டத்தை ராஜ்யசபாவில் எளிதாக நிறைவேற்ற மத்திய அரசால் முடிந்தது.

இந்த நிலையில் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான, மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசுக்கு துணை நின்று, சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது.

மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

மத்திய பாஜக அரசின் சிறுபான்மையினர் விரோத - தமிழர் விரோத செயல்கள் அனைத்துக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும், தமிழின விரோத அதிமுக அரசை கண்டித்து, திமுக சார்பில் 2019 டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments