மேட்டுப்பாளையம் துயர நிகழ்வு... மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்

ஸ்டாலின் ஆறுதல் கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் உறவினர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி தேற்றினார். மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் மழை காரணமாக 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக 17 பேர் நேற்று காலை உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அரசுப்பணி மேட்டுப்பாளையம் நடூர் காலனிக்கு இன்று காலை சென்ற மு.க.ஸ்டாலின் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கரங்களை பற்றி கண்ணீர் விட்டு அழுத 17 பேரின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி அவர்களை தேற்றினார். ஸ்டாலினிடம் நடூர் காலனி மக்கள் சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தை விரிவாக விளக்கினர்.

மேலும், ஒரு சிலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் ஓலமிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிய ஸ்டாலின், நியாயம் கிடைக்க தாம் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தார். மேலும், அவர்களை கவலைகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

பாய்ச்சல்
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய பின்பு, மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு போதாது எனவும் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நியாயம் கேட்டு போராடிய போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றும், காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் ஆட்டுவிப்பது யார் எனக் கேள்வி எழுப்பினார்.

Comments