நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்- டெல்லில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்-தடியடி

Massive Protest Against Citizenship Amendment Bill Across Nation டெல்லி: நாடு முழுவதும் இன்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் (ஜேஎம்ஐ) இன்று போராட்டம் நடத்தினர். பல்கலைக் கழகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

ஆனால் பல்கலைக் கழகம் அருகே மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து போலீசாருக்கு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் மணிக்கூண்டு கோபுரம் அருகே என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பீகாரின் அராரியாவிலும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தினர். கர்நாடகாவின் குல்பர்காவில் முஸ்லிம் சவுக் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்த்திலும் முஸ்லிம்கள் பெருந்திரளாக திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

Comments