மோடிஜி மறந்திட்டீங்களா.. அஸ்ஸாமில் இன்டர்நெட் சேவையில்லாமல் உங்கள் மெசேஜை எப்படி படிப்பார்கள்? காங்.

செழித்து டெல்லி: அஸ்ஸாமில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அவர்களே உங்களது மெசேஜை அம்மாநில மக்கள் எப்படி படிப்பார்கள் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மோடி அவர்களே அஸ்ஸாமில் உள்ள நமது சகோதர சகோதரிகள் எப்படி உங்களது உறுதிமொழி மெசேஜை படிப்பார்கள்? ஒரு வேளை நீங்கள் மறந்திருக்கலாம் அங்கு இன்டர்நெட் சேவை நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளது என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தாமல் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது.

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் மேலும் போராட்டம் தீவிரமடைந்து ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.குவாஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் கவலை கொள்ள வேண்டாம்.

யாருடைய உரிமைகளும் பறிக்கப்படாது என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அது போல் அம்மாநிலத்தின் தனி அடையாளம், அழகான கலாச்சாரம் ஆகியவையும் பறிக்கப்படாது. மாநிலம் மென்மேலும் செழித்து வளம் பெற்று வளரும்.

6-ஆவது பிரிவின்படி அஸ்ஸாம் மாநில மக்களின் நில உரிமைகள், மொழி, கலாச்சாரம், அரசியல் ஆகியவை நிச்சயம் அரசியல் சாசன ரீதியில் பாதுகாக்கப்படும் என நானும் மத்திய அரசும் உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார் மோடி. இந்த ட்வீட்டை இன்டர்நெட் இல்லாத அஸ்ஸாம் மக்கள் எப்படி படிப்பார்கள் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Comments