நெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள்

லக்னோ : உ.பி.,யின் உன்னாவ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண் கடைசியாக போலீசாரிடமும், தனது குடும்பத்தினரிடமும் பேசிய வார்த்தைகள் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம் பெண், கோர்ட் விசாரணைக்கு செல்லும் வழியில் பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டார். இதில் 95 சதவீதம் காயமடைந்த அப்பெண், சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அப்பெண் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்து அவரின் சகோதரர் கூறுகையில், நேற்று என் சகோதரியை நான் அரவணைத்து பேசிய போது, " என்னை காப்பாற்றுங்கள். நான் இறக்க விரும்பவில்லை. என்ன நடந்தாலும் அவர்களை தப்பிக்க விட்டு விடக்கூடாது. அவர்களை தூக்கிலிட வேண்டும்" என கூறினார். யாரையும் தப்பி விட மாட்டோம் என நான் அவளுக்கு வாக்குறுதி அளித்தேன் என்றார்.

அப்பெண்ணின் தந்தை கூறுகையில், என் மகளுக்கும் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். ஐதராபாத்தில் வழங்கப்பட்டது போன்ற நீதி வழங்கப்பட வேண்டும். அது மட்டும் தான் இது போன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வலுவான எச்சரிக்கையாக இருக்கும். அந்த பயம் ஏற்படாமல் போனதால் தான் பலர் தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றாலும், ஜாமினில் வெளியில் வந்து மீண்டும் அதே குற்றத்தை செய்கிறார்கள் என்றார்.

Comments