
லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்ஸன், 69, மிகப் பெரிய கோடீஸ்வரர். விர்ஜின் குழுமத்தின் நிறுவனரான இவர், ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட 400 கம்பெனிகளை நடத்தி வருகிறார். இந்தியாவில் மும்பை முதல் புனே வரையிலான ஹைப்பர்லூப் திட்டத்திற்கு உதவி புரிந்து வருகிறார். இதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தபோது ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்கின. தற்போது உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றதும், இத்திட்டத்தை கைவிடும் முடிவில் இருக்கிறார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை சந்திக்க மும்பை வந்துள்ளளார் பிரான்சன். அப்போது நிருபர்களிடம் பிரான்ஸன் கூறியதாவது: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக என்னுடைய டி.என்.ஏ.,வை பரிசோதனை செய்தனர். அதில், எனது, டிஎன்ஏ தமிழகத்தை சேர்ந்தது என தெரியவந்தது.
என் மூதாதையர் தமிழகத்தின் கடலூரில் 1793ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது மூதாதையரில் ஒருவர், தமிழக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் நான் இந்தியா வரும்போதெல்லாம், என்னை சந்திப்பவர்களிடம் நாம் உறவினர்களாக கூட இருக்கலாம் என கூறுவதுண்டு. இவ்வாறு பிரான்ஸன் கூறினார்.
Comments