
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்து முரசொலி அலுவலகம் ஆவணங்களை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதை ஏற்க மறுத்த ராமதாஸ் மூலப்பத்திரம் வேண்டும் என மீண்டும் ட்வீட் செய்தார். இதனால் திமுக பாமக இடையே அறிக்கையுத்தம் நடைபெற்றது.
திமுக-பாமக இடையேயான கருத்துமோதலில் பாஜகவும் நுழைந்தது. அக்கட்சியின் தேசியச் செயலாளர் சீனிவாசன் பாமகவை விட ஒரு படி மேலாக சென்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அவர் அளித்த புகார் திமுகவை கொந்தளிக்க வைத்தது.
முரசொலி அலுவலகத்தை வைத்து பாமகவும், பாஜகவும் அரசியல் செய்வதாக கூறிய திமுக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறியது. ஆனால் புகார் கூறிய விசாரணைக்கு ஆஜராகாமல் சீனிவாசன் அவகாசம் கேட்டு நழுவினார்.
முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்பியதற்கு பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக தேசியச் செயலாளர் சீனிவாசனும் திமுகவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார். மேலும், அவ்வாறு செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் பாமக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
Comments