தேர்தல் வெற்றி வழக்கில் பிரக்யா சிங் மனு தள்ளுபடி

ஜபல்பூர்: "தேர்தல் வெற்றி வழக்கில், பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாகூர் தாக்கல் செய்த மனுவை, மத்திய பிரதேசத்தின், ஜபல்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள போபால் தொகுதியில், மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், பிரக்யா சிங் தாகூர் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, பத்திரிகையாளர் ராகேஷ் தீக் ஷித் என்பவர், ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில் பிரசாரம் செய்து, பிரக்யா சிங் வெற்றி பெற்றது செல்லாது' என அறிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, பிரக்யா சிங் தாகூர் தாக்கல் செய்த மனுவில், 'ராகேஷ் தீக் ஷித் அளித்த தேர்தல் பிரசார, 'வீடியோ'க்களின் நம்பகத்தன்மை ஆய்வுக்குறியது என்பதால், மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று இந்த மனுவை, போபால் உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ''பிரக்யா சிங்கின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை விரைவில் துவங்கும்,'' என, ராகேஷ் தீக் ஷித் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

Comments