
அவ்வளவு ஏன் இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை இண்டெக்ஸ்களில் இஒன்றான நிஃப்டி 50 இண்டெக்ஸில் கூட, 41 சதவிகிதம் வெயிட்டேஜ் இருக்கும் துறை, நிதித் துறை தான்.
அந்த அளவுக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு நிதித் துறை அவசியம். அப்படிப்பட்ட இந்திய நிதித் துறைக்கே, இன்று நிலைமை சரியில்லை என ப்ளூம்பெர்க் ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறது.

அதாவது, இந்தியா 100 ரூபாய் மொத்தக் கடன் கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அதில் 9.3 ரூபாய் மோசமான கடனாக தேங்கி நிற்கிறது. இந்த மோசமான கடன்களை செயல்படாத கடன்களாகச் சொல்லலாம். நம் எளியோர் மொழியில் என்பிஏ (NPA - Non Performing Asset) என்று சொல்லலாம்.

சமீபத்தில் வெளியான செய்திகள் மற்றும் ப்ளூம்பெர்க் தரவுகள் படி, 2019-ம் ஆண்டில், இந்தியாவின் மோசமான கடன்களின் அளவு 9.3 சதவிகிதமாக குறைந்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகளே சொல்கின்றன. ஆச்சர்யமாக இத்தாலி நம்மை விட 0.8 சதவிகிதம் தன் மோசமான கடன்களைக் குறைந்து இருக்கிறார்கள்.
2019-ல் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியா மற்றும் இத்தாலி மட்டும் தான் தங்களின் மொத்த கடனில் 5 சதவிகிதத்துக்கு மேல் மோசமான கடன்களாக இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரேசில் கூட தன் மொத்த கடன் தொகையில் 3.1 சதவிகிதம் மட்டுமே மோசமான கடன்களாக இருக்கிறது. இதை விட ஆபத்தான விஷயம் இந்திய வங்கிகளுக்கு இருக்கிறதா என்ன..?
ஏன் இந்தியாவில் மட்டும் மோசமான் அகடன்கள் இவ்வலவு அதிகமாக இருக்கிறது என்கிற கேள்வியைக் கேட்கத் தொடங்கினால்... ப்ளூம்பர்க் அதற்கும் விடைகளைக் கொடுத்து இருக்கிறார்கள். 1. என் பி எஃப் சி என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகள். 2. மெல்ல நகரும் திவால் சட்ட நடவடிக்கைகள் என குறிப்பிட்டு இருக்கிறது ப்ளூம்பெர்க்.
1. என் பி எஃப் சி
இந்த என் பி எஃப் சி நிறுவனங்கள், பொதுவாக ஒரு வங்கியிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள். குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தைத் தான், மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். உதாரணமாக 09 சதவிகிதம் கடன் வாங்கி 15 சதவிகிதத்துக்கு கடன் கொடுத்தால் 06 சதவிகிதம் லாபம். இது தான் என் பி எஃப் சி நிறுவனங்களின் வியாபாரம்.
இப்போது என் பி எஃப் சி நிறுவனங்கள் யாருக்கு எல்லாம் கடன் கொடுத்ததோ, அவர்களிடம் இருந்து கடனை திருப்பி வசூலிக்க முடியவில்லை. கொடுத்த கடன்களை திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் என் பி எஃப் சி நிறுவனங்கள் கடன் கொடுத்த சில பெரிய நிறுவனங்களே திவால் ஆகிவிட்டன. உதாரணம் ஐ எல் & எஃப் எஸ்.
விளைவு
1. என் பி எஃப் சி நிறுவனங்களால் புதிதாக மேற்கொண்டு கடன் கொடுக்க பணம் இல்லை. நிதி நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கிறது. 2. என் பி எஃப் சி நிறுவனங்களாலும், வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இப்படியே மோசமான கடன்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 3. இந்தியப் பொருளாதாரம் கடந்த 6 ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது.
2. திவால் சட்டம்
இந்தியாவின் (insolvency and bankruptcy code)திவால் சட்டத்தின் படி, ஒருவர் வாங்கிய கடனை ஒழுங்காகச் செலுத்தவில்லை என உறுதி செய்துவிட்டால், அடுத்த 270 நாட்களுக்குள் திவால் சட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்தி, அவர்களிடம் இருந்து கடனை வசூலித்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படி நடக்கவில்லை.
கடந்த ஜூன் 2018 முதல் 2019 ஜூன் வரையான ஐந்து காலாண்டுகளில் திவால் சட்டத்தின் கீழ் கடன்களை வசூலிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. 2018 ஜூன்-ல் 186 ஆக இருந்த திவால் வழக்கு எண்ணிக்கை, இந்த ஜூன் 2019-ல் 445 வழக்குகளாக அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் சொல்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின், ஐந்து ட்ரில்லியன் டாலர் கனவு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகை ஒழுங்காக வந்து சேர வேண்டும். அப்படி சேராமல், மேலே சொன்னது போல 9.3 சதவிகிதம் மோசமான கடன்களாக இருந்தால்.. எப்படி இந்தியப் பொருளாதாரம் வளரும்..?
இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வாரா கடன்களை குறைத்து, இந்திய நிதி நிறுவனங்களை மேற் கொண்டு கடன் கொடுக்க வைக்க வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடன் கொடுப்பது தடை பட்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமே ஸ்தம்பித்து விடும். சொல்லப் போனால் பொருளாதாரமே முடங்கிவிடும் எனலாம்.
பேராபத்து சுழற்சி
இந்தியாவில் கடன் கொடுப்பது நின்றுவிட்டால்... 1. புதிய திட்டங்கள் மற்றும் வியாபார விரிவாக்கங்கள் வராது, 2. மேலே சொன்னது நடக்கவில்லை என்றால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்காது. 3. வேலை வாய்ப்பு இல்லை என்றால் தேவை சரியும் 4. தேவை சரிந்தால், நுகர்வு சரியும் 5. நுகர்வு சரிந்தால்... உற்பத்தி சரியும். 6. உற்பத்தி சரிந்தால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், தன் ஊழியர்களின் வேலையை பறிப்பார்கள். 7. மீண்டும் தேவை சரியும், நுகர்வு சரியும்... இப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காணும்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தங்களால் முடிந்த வரை இந்திய நிதி நிறுவனங்களை கடன் கொடுக்க வைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், மத்திய அரசும், ஆர்பிஐ-யும் இந்த வாரா கடன் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். எடுத்துக் கொள்வார்கள் என நம்புவோம்.
Comments