
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மையினர் அகதிகள் மத துன்புறுத்தலால் 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டுவதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டமே தேவையே இல்லை என்று கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது
இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில் தடியடி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் எரிப்பு, துப்பாக்கிச்சூடு போராட்டம் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தால் பல கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தால் இந்திய சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு சொல்லியும் போராட்டம் ஓயவில்லை. மாறாக நாளுக்கு நாள் பல மாநிலங்களில் போராட்டம் அதிகரித்தே வருகிறது. குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த போராட்டங்கள் குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி, "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றார்.
இதில் ரஜினியின் முதல் இரு வரிகளான எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது என்ற கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்ட விவகாரத்தில் வன்முறை மற்றும் கலவரம் செய்வது யார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அத்துடன் குடியுரிமை சட்டம் குறித்து ரஜினியின் நிலைப்பாடு என்ன என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா அல்லது நடுநிலை வகிக்கிறாரா என்று கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
Comments