
இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்ததுக்கு எதிராக மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வக்ஃபு வாரிய கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.இந்த சூழ்நிலையில் அந்த கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர்.
கடலூரில் கந்தசாமி மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஜாமியா மில்லியா பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய ஏராளமான மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் டெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலரும் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போராட்டம் நடக்கும் கல்லூரிகளில் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
Comments