
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதிமுக அதன் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை அழைத்து என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என நூல் விட்டு பார்த்தது. அதில் நேரடி தேர்தலோ, மறைமுகத் தேர்தலோ அதைப்பற்றி கவலையில்லை எத்தனை நகராட்சி, எத்தனை மாநகராட்சி வழங்குவீர்கள் என கூட்டணிக் கட்சியினர் அதிமுகவிடம் கேள்வி எழுப்பினர்.
இப்போது தானே முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், இன்னும் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என அதிமுக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் அளித்த மாநகராட்சி பட்டியல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் மட்டும் நேற்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆலோசித்துள்ளார்கள்.
தேமுதிக மதுரை மாநகராட்சியை தங்களுக்கு அளித்தே ஆக வேண்டும் என நெருக்கடி தருவதாக அமைச்சர் செல்லூர் ராஜுவிடமும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் அதிமுக தலைமை கூறியுள்ளது. இதனால் உஷ்ணமான அவர்கள் இருவரும், அண்ணே அது மாதிரி மட்டும் எந்த முடிவும் எடுத்துடாதீங்க, மதுரையை கூட்டணிக் கட்சிக்கு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவிட்டார்களாம்.
பாமகவை பொறுத்தவரை அதிமுகவுக்கு பெரியளவு நெருக்கடியை அளிக்கவில்லையாம். ஆவடி தான் அதன் முக்கிய இலக்காம். இதேபோல் த.மா.கா.வுக்கு மாநகராட்சி கிடையாது என்றும், உரிய எண்ணிக்கையில் நகராட்சிகளை தருவதாகவும் அதிமுக தரப்பில் முதற்கட்டமாக பேசப்பட்டுள்ளது.
Comments