போலீசே எதிர்பார்க்கவில்லை.. களம் வந்த பிரியங்கா காந்தி.. இந்தியா கேட் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா

Priyanka Gandhi sit on a symbolic protest over police action during students டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி, ஆகியவற்றை கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி திடீரென தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். காவல்துறையே, எதிர்பார்க்காத நிலையில் திடீரென அவர் போராட்டக்களம் வந்துள்ளார்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி இவ்வாறு போராட்டம் நடத்துவது ஊடகங்களுக்கு மட்டுமல்ல, உளவுத்துறைக்கு கூட தெரியாது. ஏனெனில் அவர் போராட்டத்தில் குதித்த போது சுமார் 10 காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே அவரை சுற்றிலும் அமர்ந்து இருந்தனர்.

இந்தியா கேட் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் அவர் அமைதியாக தர்ணா போராட்டத்தில் உட்கார்ந்து உள்ளார். காந்திய வழியில் அவர் தர்ணாவில் குதித்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காவல்துறை, உளவுத்துறை, ஊடகம் என யாருக்குமே தெரியாமல் திடீரென பிரியங்கா காந்தி அங்கு வருகை தந்து போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கைகோர்த்துள்ளார். பிரியங்கா காந்தி வருகை தந்ததை அறிந்த பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கே.சி.வேணுகோபால், ஏ.கே. ஆண்டனி, பி.எல்.புனியா, அகமது படேல் ஆகிய மூத்த தலைவர்களும் அங்கே வந்து பிரியங்கா காந்தியுடன் அமர்ந்து அடையாள தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பிரியங்கா காந்தி தெரிவித்திருந்த நிலையில், இப்போது நேரடியாகவே அவர், களம் வந்திருப்பதால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

Comments