
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஊர்வலம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கோவையில் போலீஸார், மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். சென்னையில் ஐஐடி மாணவர்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
அது போல் கேரளம், கர்நாடகம், புதுவை, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் மாணவர்கள், அரசியல் அமைப்பினர், இளைஞர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று கேரளத்தில் நடைபெறும் சத்தியாகிரகத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
வடஇந்தியாவில் மட்டுமே போராட்டம் நடந்து வந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் போராட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியே காரணமாகும். திமுக சார்பில் நாளை குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Comments