
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்கார சம்பவத்தின் சோகம் மறைவதற்கு முன், உபி.,யில் உன்னாவ் நகரில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளித்த இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அப்பெண்ணும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. பார்லி.,யில் மக்கள் பிரதிநிதிகள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டில்லியில் உன்னாவ் சம்பவத்தை கண்டித்து பெண் ஒருவர் தனது 6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தன் மீதும், மகள் மீது பெட்ரோலை ஊற்றி அப்பெண் தீக்குளிக்க முயன்ற போது, போலீசார் அவரை தடுத்து, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கேரளாவில் வயலாறு பகுதியில் 2017 ம் ஆண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்து, கொன்ற குற்றவாளிகளில் ஒருவரான மது என்பவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ம.பி., மாநிலம் இந்தூரில், சிறுமியை பலாத்காரம் செய்த நபரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர்கள், குற்றவாளியை சராமரியாக தாக்கி, அடித்து உதைத்தனர்.
கர்நாடகாவில் 2014 ம் ஆண்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 32 வயது இளைஞருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் மாநில அரசு இழப்பீடு வழங்கவும் சிவமோகா சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறையும், அபராதமும் மட்டும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
Comments