
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஸ்டாலின், பரிசுப் பொருட்களை வழங்கி சிறுபான்மை மக்களுக்காக திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து குடியுரிமை சட்டம் தொடர்பாகவும் பேசினார்.
இரட்டை குடியுரிமை என்றால் என்னவென்றே தெரியாமல் அதை வலியுறுத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இப்போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இரட்டை குடியுரிமைக்கு வழிவகை உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
வரும் 23-ம் தேதி பேரணி நடத்தியும் குடியுரிமை சட்டம் விவகாரத்தில் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை மிக விரைவில் நடத்துவோம் என அறிவித்தார் ஸ்டாலின். அடுத்தகட்டமாக அனைத்து கட்சிகளையும் அழைத்துப்பேசி முடிவெடுத்து, இதுவரை தமிழகமே சந்தித்திருக்காத வகையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடக்க அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேரும், பாமக எம்.பி. அன்புமணியும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இந்த 12 பேரும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்தச் சட்டம் நிறைவேறிய இருக்காது எனக் கூறினார்.
Comments