ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்.. பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் அரசகுமார்

ஸ்டாலின் பங்கேற்பு சென்னை: புதுக்கோட்டையில் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் மீண்டும் இணைந்தார். ஸ்டாலினை புகழ்ந்து பேசியதற்காக பாஜக மாநில துணை தலைவர் அரசகுமாருக்கு கட்சி நிகழ்ச்சி, ஊடக விவாதங்களில் பங்கேற்க அரசகுமாருக்கு பாஜக தடை விதித்தது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் அரசகுமார். இவர் அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது அரசகுமார் பேசுகையில் எம்ஜிஆருக்கு பிறகு தான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின். என்றைக்கு நிரந்தர தலைவராக இருப்பவர் ஸ்டாலின்தான்.

முதல்வரின் இருக்கையை தட்டி பறிக்க நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்சினையின்போதே ஸ்டாலின் முதல்வராகியிருப்பார். ஜனநாயக முறையில் முதல்வராக விரும்புபவர் அவர். காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்றார்.

இது பாஜகவிலும் கூட்டணி கட்சியான அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் யதார்த்தனமாக கூறினேன். ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என நான் கூறவில்லை என விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது பாஜகவிலிருந்து விலகி திமுகவில் மீண்டும் இணைந்தார். அவர் ஏற்கெனவே திமுகவில் இருந்தார். பின்னர் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கினார். பின்னர் அங்கிருந்து பாஜக சென்ற அரசகுமார் மீண்டும் தாய் கழகத்துக்கே வந்துவிட்டார்.

Comments