உன்னாவ் பலாத்கார வழக்கு.. முன்னாள் பாஜக எம்எல்ஏவுக்கு என்ன தண்டனை.. இன்று அறிவிப்பு

Delhi court to decide ex-BJP MLA Kuldeep Sengars punishment in Unnao rape case today டெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு என்ன தண்டனை என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது இளம் பெண்ணை முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் கடத்தி பலாத்காரம் செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து எம்எல்ஏ குல்தீப் சிங்கை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணும் உறவினர்கள் சிலரும் ரேபரேலி சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க சென்றனர். அப்போது இவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். மற்ற இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு உள்பட 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பின் கோரிக்கையை ஏற்று டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ மற்றும் எம்எல்ஏ தரப்பு ஆகிய இருதரப்பு வாதங்களும் டிசம்பர் 9ம் தேதி நிறைவு பெற்றது.

இதையடுத்து உன்னாவ் பலாத்கார வழக்கில் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பளித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்க உள்ளது.

Comments