
குடியுரிமைச் சட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வரும் அரசியல் கட்சிகளில் திமுகவும் ஒன்று. அந்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம், பேரணி என நடத்தி எதிர்ப்பை பலமாக பதிவு செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்திய மு.க.ஸ்டாலின், சி.ஏ.ஏ.வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஓயாது எனக் கூறியிருந்தார். மேலும், அடுத்தக்கட்டமாக இன்னும் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என அறைகூவல் விடுத்திருந்தார்.
இதனால் அடுத்தக் கட்டமாக குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எப்படி போராட்டம் நடத்தலாம் என மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ராகுல்காந்தியை சிறப்பு அழைப்பாளராக சென்னைக்கு அழைத்து வந்து அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தும் யோசனையும் இருக்கிறதாம்.
பொங்கல் வரை திமுக தரப்பில் போராட்டங்கள் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றும், பொங்கல் பண்டிகை முடிந்தபின்னர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அடுத்தக் கட்ட போராட்டத்தை ஸ்டாலின் முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments