
அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சர்ச்சைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தது. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்களூருவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு உள்ளது. இதேபோல் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல், தவறாக வழிநடத்தல், இரண்டு பெண்களை கடத்தியது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதனால் குஜராத் மற்றும் கர்நாடகா போலீசார் நித்யானந்தாவை தீவிரமாக தேடிவருகிறார்கள். நித்யானந்தா நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது.
தென்அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் தனி தீவு வாங்கியுள்ள நித்யானந்தா அதை எல்லைகள் அற்ற தனிநாடாக பிரகடனம் செய்துள்ளார்.அந்த நாட்டை இந்து நாடாக அறிவித்துள்ளதுடன், இந்துக்கள் இங்கு வரலாம் என்று அறிவித்துள்ளார்.அந்த நாட்டிற்கு என தனி பாஸ்போர்டையும் வெளியிட்டுள்ளார். அந்த நாட்டிற்கு கைலாயம் என்று பெயரிட்டுள்ளார். ஆனால் இதெல்லாம் உண்மையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அரசு ரீதியான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இதனிடையே கைலாசா என்ற அவரது வெப்சைட் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் நித்யானந்தா எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை இன்னமும் போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை.
குஜராத் போலீசார் நித்யானந்தாவை பிடிக்க இதுவரை பெரிய அளவில் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் பல்வேறு வழக்குகளை குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் இருப்பித்தை அறிய இதுவரை போலீசார் இன்டர்போலை அணுகி புளுகார்னர் நோட்டீஸை அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் நித்யானந்தாவின் பிடியில் உள்ள இரண்டு பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று குஜராத் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் நித்யானந்தாவை பிடிக்க வெளியுறவுத்துறையின் உதவியை நாடலாம் என ஏற்கனவே குஜராத் உயர்நீதிமன்றம் அம்மாநில போலீசாருக்கு அறிவுறுத்தியிருந்தது.
Comments