
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கியிருந்தார்.

சென்னையை பொறுத்தவரை குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதிமாறன் எம்.பி. தலைமை தாங்கினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழச்சி தங்கபாண்டியன் தலைமை தாங்கினார்.

சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. சேப்பாக்கத்தில் கூட்டம் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் வழக்கம் போல் இருந்தது. ஆனால், வடக்கு மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே கட்சியினர் கலந்துகொண்டனர்.
கனிமொழி ஆர்ப்பாட்ட மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, மேடைக்கு பின்னால் நின்ற அவரது காரை சுற்றி நூற்றுக்கணக்கானோர் கூடி நிற்கத் தொடங்கினர். கனிமொழி காரில் ஏறும் போது அவருக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்ட முழக்கங்களை கூட கூறாமல் மேடைக்கு பின்புறமே நின்றுகொண்டனர்.
தென்சென்னை திமுக சார்பில் ஆதம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகளவும் கலந்துகொண்டனர். மா.சுப்பிரமணியன் தனிப்பட்ட முறையில் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டார்.
Comments