
சென்னை ஐஐடிக்குள் செல்லும் வகையில் வேளச்சேரி காந்திநகர் பகுதியில் குறுகிய பாதை ஒன்று அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. அதன் வழியாக ஐஐடி ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர் சென்று வந்தனர். மேலும், மாணவர்களும் இந்தப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
சென்னையில் ஐஐடி தொடங்கும் போது அந்த நிறுவனத்திற்காக கிழக்கு வேளச்சேரி மக்களிடமிருந்து நிலம் பெறப்பட்டது. மேலும், அந்த பகுதியை ஐஐடியுடன் இணைக்கும் வகையில் கிருஷ்ணா கேட் என பெயரிடப்பட்டு ஒரு குறுகிய பாதையும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எந்த முன்னறிவிப்புமின்றி பின்புற பாதையை ஐஐடி நிர்வாகம் மூடியது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஐஐடி வளாகத்தில் உள்ள கேண்டீன்களின் மாணவர்கள் உணவு பண்டங்கள் வாங்குவதை தவிர்த்து வெளியில் உள்ள கடைகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர். பாதை அடைக்கப்பட்டது பற்றி ஐஐடி நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளனர்.
Comments