குடியுரிமை சட்டம்- தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்- சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி!

SDPI Protest agains CAA at Chennai
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தொடருகின்றன. சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கம் மற்றும் டெல்லிக்கும் பரவியது. தலைநகர் டெல்லி தற்போது போர்க்களமாக காட்சி தருகிறது.

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் போராடிய மாணவர்களை போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே கொந்தளிக்க வைத்தது. நாடு முழுவதும் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தமிழகத்தில் இன்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். சென்னை, தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முயன்றனர். இவர்கள் அனைவரையும் பாரிமுனை குறளகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனாலும் போலீசாரின் தடுப்பை மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முன்னேறிச் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் கைது செய்தனர்., இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Comments