
குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து ரவீந்தரநாத் குமார் வாக்களித்ததற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே அதிமுக எம்.பி.அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அளித்தனர்.
அதிமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே நபர் ரவீந்தரநாத்குமார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.மகனான இவர் கடுமையான போட்டிக்கு மத்தியில் தேனியில் வெற்றிபெற்றார். அதன்பிறகு பாஜக நிலைப்பாட்டுடன் தன்னை நெருக்கிக் கொண்ட அவர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் எந்த மசோதாவானாலும் முதல் ஆளாக ஆதரவளித்து வருகிறார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த காரணத்திற்காக ரவீந்தரநாத் குமார் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
குடியுரிமைச் சட்டத்தை ரவீந்தரநாத் குமார் ஆதரித்ததை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன. பெரியகுளத்தில் நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டத்தில் ரவுண்டானாக்கள், திடல்களில் கூடி போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினர் முதல்முறையாக எம்.பி. அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது ஓ.பி.எஸ்.தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் மூலம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
Comments