
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற மாநகரங்கள் தான், நடுத்தர ஏழைகள் மற்றும் எளிய மக்கள் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக தஞ்சம் புகும் சரணாலயங்கள். பல சமயங்களில் இங்கேயே தங்கி செட்டிலும் ஆகிவிடுவார்கள்.
இந்த மாநகரங்களில் மெட்ரோ சேவைகள் இருந்தாலும், 5 ரூபாய், 10 ரூபாயை மிச்சம் பிடிக்க, புற நகர் ரயில்களிலேயே பயணிப்பதையும் நாம் கண் கூடாகக் கண்டு இருப்போம்.
அதோடு, இந்தியாவின் பெரும்பாலான மக்கள், வெளியூர்களுக்கு (குறிப்பாக 3 மணி நேரங்களுக்கு அதிகமாக பயண நேரம் இருக்கும் ஊர்களுக்கு) என்றால், நிச்சயம் ரயில் சேவையைப் பயன்படுத்த நினைப்பார்கள். ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காகவே பயணம் மேற்கொள்ளாத, சக இந்தியர்கள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிலவரப் படி, சுமார் 900 கோடி பயணிகள், இந்திய ரயில்வே சேவைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். ஆக இந்திய ரயில்வே என்கிற ஒரு பொது போக்குவரத்து சேவையை, எத்தனை கோடி இந்தியர்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தரவு போதும்.
சுமார் 66,000 கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் சுமாராக 7,300 ரயில் நிலையங்களையும் கொண்ட இந்திய ரயில்வேயை மட்டும் நம்பி பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா..? அப்படிப்பட்ட, இந்திய ரயில்வே போர்டின் தலைவர் வினோத் குமார், இந்திய ரயில்வே கட்டணங்களை (சரக்குக் கட்டணம் மற்றும் பயணிகள் கட்டணம்) சரி செய்ய (Rationalize) இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
ஆக, இந்திய ரயில்வே போர்ட், பயணிகள் கட்டணத்தை அதிகரிக்கப் போகிறதா..? என்கிற கேள்விக்கு "கட்டணங்களை சரி செய்யப் (Rationalize)போகிறோம். இதற்கு மேல் விவரங்களைச் சொல்ல முடியாது. இது சென்சிட்டிவ்வான விஷயம். ஏற்கனவே சரக்கு கையாளும் கட்டணம் அதிகமாக இருக்கிறது. சரக்கு கையாளுதலை அதிகரிப்பது எங்கள் இலக்கு" எனச் சொல்லி இருக்கிறார் ரயில்வே போர்ட் தலைவர் வினோத் குமார்.
ஒரு காலத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த சரக்கு கையாளுதலில் சுமார் 80 சதவிகித சந்தையை வளைத்துப் போட்டு, தனிக் காட்டு ராஜாவாக இருந்த ரயில்வேஸ், தற்போது ஒட்டு மொத்த சந்தையில் 40 சதவிகிதத்தைக் கூட தன் கைவசம் வைத்துக் கொள்ள முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறது.
கடந்த, அக்டோபர் 2018-ல், இந்திய ரயில்வே கையாண்ட மொத்த சரக்குகளை விட, அக்டோபர் 2019-ல் சுமார் 8 சதவிகிதம் குறைந்த அளவிலான சரக்குகளை மட்டுமே கையாண்டு இருக்கிறார்களாம். இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வேஸில், பயணிகளுக்கு குறைந்த விலையில் பயணக் கட்டணங்களை வசூலித்துவிட்டு, சரக்குகளைக் கையாள கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறார்களாம். ரயில்வேஸில் சரக்குகளைக் கையாளும் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி, தொழிற் துறையினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.
பொதுவாக ஒரு பொருளின் விலையை, இந்த போக்குவரத்துக் கட்டணங்களையும் சேர்த்து தான் கணக்கிடுவார்கள். இப்போது ரயில்வேஸில், சரக்குகளைக் கையாள கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது பொருட்களின் விலையில் நேரடியாக எதிரொலிக்கும் எனச் சொல்கிறார்கள். கடைசியில், பொருட்களின் கூடுதல் விலையை, மக்களாகிய நாம் தன் சுமந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த ஏப்ரல் - நவம்பர் 2018 உடன், ஏப்ரல் - நவம்பர் 2019 காலத்தை ஒப்பிட்டால், சரக்கு கையாளுதல் மூலம் வரும் வருவாய், வெறும் 0.95 சதவிகிதம் தான் அதிகரித்து இருக்கிறதாம். இந்த 2019 - 20 நிதி ஆண்டில், இந்திய ரயில்வேஸின் வருவாய் 1.43 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இது நடக்குமா என கேள்வி எழுகிறது. அதோடு வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்திய சரக்கு கையாளுதல் சந்தையில் 40 சதவிகிதத்தைப் பிடிக்க, இந்திய ரயில்வே, இலக்கு நிர்ணயித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்திய ரயில்வேஸின் வருவாயை அதிகரிக்கவும் மற்றும் இந்திய ரயில்வே தன் சரக்கு கையாளுதல் சந்தையை அதிகரித்துக் கொள்ளவுமே, தற்போது பயணச் சீட்டு மற்றும் சரக்கு கையாளும் கட்டணங்களை சரி செய்யப் போகிறது போல. அதையும் அரசு தெளிவாகக் குறிப்பிட்டால் தான் உண்டு.
"சரக்கு கையாளுதலைப் பொருத்தவரை, விலை மட்டுமே ஒரு முக்கியப் பிரச்சனை அல்ல. நேரமும் தான். எனவே இந்திய ரயில்வேஸ், வெறுமனே தன் சரக்கு கையாளும் கட்டணங்களைக் குறைத்தால் போதாது, நேரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் க்ரிசில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆலோசனைக் குழு இயக்குநர் ஜெகன் நாராயண்.
Comments