எந்த வேறுபாடும் இல்லை.. இந்தியா முழுக்க மாணவர்களை ஒன்றிணைத்த போராட்டம்.. பல லட்சம் பேர் பங்கேற்பு

லட்சம் பேர் டெல்லி: டெல்லியில் நேற்று ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து தற்போது நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் உச்சம் அடைந்துள்ளது. இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் நேற்று போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த போராட்டம் நாடு முழுக்க மாணவர்களை இணைத்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று இரவே உத்தர பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்தது. இரவு முழுக்க அங்கு போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு கலவரம் ஏற்பட்டது. பின் டெல்லி ஐஐடியில் போராட்டம் நடந்தது. அதன்பின் ஹைபதராபாத் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடந்தது.

ஹைதராபாத்தில் இருக்கும் மவுலானா அசாத் உருது பல்கலைக்கழகத்திலும் போராட்டம் நடந்தது. அதின்பின் மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, கவுகாத்தி ஐஐடி ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது. கேரளாவில் பல மாணவ சங்கங்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறது.

மிக முக்கியமாக டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சைன்ஸ், மும்பையில் இன்று காலையில் இருந்து போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக லயோலா, நியூ காலேஜ் ஆகிய சென்னையின் முக்கிய கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

அதிலும் மிக முக்கியமாக மாணவர்கள் எந்த மத வேறுபாடும் இன்றி போராட்டம் செய்து வருகிறார்கள். இஸ்லாமியர்களை விட இந்துக்கள் அதிகமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தொடங்கி ஐஐடியில் படிக்கும் பெரும்பாலான இந்துக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

எந்த பாகுபாடும் இன்றி இந்த போராட்டம் பல லட்சம் மாணவர்களை ஒன்றிணைந்துள்ளது. நாடு முழுக்க பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.இந்த போராட்டம் இப்போதைக்கு முடியும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments