குடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்., திரிணாமுல் காங். உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Cong, TMC move to SC against citizenship law டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் பல மணிநேர விவாதங்களுக்குப் பின்னர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நள்ளிரவில் ஒப்புதல் அளித்தார்.

இம்மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோர் இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் இம்மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க மொய்த்ரா வழக்கறிஞர் கோரினார். மஹூவா மொய்த்ரா தமது மனுவில், மத்திய அரசின் மசோதா, மத பிரிவினையின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டக் கூடாது. இலங்கை, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் மதச்சிறுபான்மையினருக்கு ஏன் குடியுரிமை வழங்க வகை செய்யவில்லை? இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

Comments