உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம்.. ஸ்டாலின் வீட்டில் குவிந்த சீனியர் தலைவர்கள்

Tamilnadu local body elections 2019: MK Stalin meets party senior leaders சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில், தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார்.

பழனிச்சாமி அளித்த பேட்டியில், தமிழகத்தில் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு திரும்பப் பெற டிசம்பர் மாதம் 13ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி எண்ணப்படும். மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் என்றும், அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் திமுக பொருளாளர், துரைமுருகன், ஆர்.எஸ் பாரதி, கே.என் நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, திமுக முழு வீச்சில் ஆயத்தமாகிவிட்டதாகவே தெரிகிறது.

Comments