உடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு

Telangana HC orders to preserve the bodies of 4 rape accused ஹைதராபாத்: ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வரும் திங்கள்கிழமை வரை பதப்படுத்தி வைக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையையும் வீடியோவாக எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் எரிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணின் இரு சக்கர வாகனத்தை திட்டமிட்டே பஞ்சர் செய்ததும் வாயில் மதுவை ஊற்றி பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை எப்படி எரித்து கொன்றார்கள் என்பதை நடித்து காட்ட சம்பவ இடத்திற்கு 4 பேரையும் போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது அதில் இருவர் போலீஸாரின் துப்பாக்கியை பறித்து மிரட்டியதாகவும் மேலும் இருவர் கற்களை போலீஸார் மீது வீசியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டர் செய்து கொன்றனர்.

இந்த சம்பவத்துக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெண் பலாத்கார வழக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக நடந்து வருகிறது. இந்த நிலையில் 4 பேரின் உடல்களையும் வரும் திங்கள்கிழமை வரை பதப்படுத்த வேண்டும். பின்னர் 4 பேரின் பிரேத பரிசோதனையை வீடியோ எடுத்து அதை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என மெஹபூப்நகர் முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments