
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கில் பற்றிய தீ தேசம் முழுவதும் பரவிவிட்டது. பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பல மாநிலங்கள் போராட்டங்களை ஒடுக்க தடை உத்தரவை அமல்படுத்திய போதும் அனைத்து இடங்களிலும் தடைகளை மீறி லட்சக்கணக்கானோர் போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்திலும் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியை போல உக்கிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லக்னோவின் ஹசன்கஞ்ச் பகுதியில் போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தலைநகர் லக்னோவில் 3 பேருந்துகள், 10 கார்கள், 4 மீடியா வாகனங்கள் மற்றும் 20 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் லக்னோ நகரமே பற்றி எரிந்தது.

கோரக்பூரில் தடையை மீறி சமாஜ்வாடி கட்சியினர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
லக்னோவில் சட்டசபைக்கு வெளியேயும் சமாஜ்வாடி கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் கூடி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து லக்னோ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டங்கள் குறித்து உத்தப்பிரதேச டிஜிபி ஓபி சிங் கூறுகையில் அலிகார், வாரணாசி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
வாரணாசியிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தடையை மீறி நடைபெற்றன. இப்போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.
Comments