17 பேர் பலியான பயங்கரம்.. உறவினர்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. பதற்றத்தில் மேட்டுப்பாளையம்

Relatives of building collapse deceased in Mettupalayam, protest மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் கட்டிட விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் இன்று, அதிகாலை 3 மணிக்கு, காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த 17 பேர் உடல்களும் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதால் அங்கு ஓயாத அழுகை சத்தம் எதிரொலித்து எப்படி இருந்தது.

ஜவுளிக்கடை உரிமையாளர், ஆறுமுகம் என்பவரின் சுற்றுச்சுவர் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் தான் அக்கம்பக்கத்து வீடுகள் இடிந்து விழுந்தன என்றும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும், 17 பேரின் உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, இன்று மேட்டுப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் மாலையில் மருத்துவமனையில் பிணவறை இருக்கக்கூடிய பகுதியில் உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

கட்டிட விபத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை அதிகரிக்க வேண்டும், விபத்துக்கு காரணமாக கூறப்படும் ஆறுமுகம் என்பவரை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அப்போது போலீசார் மற்றும் உறவினர்கள் நடுவே ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.

Comments