உயிரிழந்த 17 பேருக்காக போராடிய 24 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

mettupalayam wall collapse: Madukkarai court ordered 24 persons to be jailed for 15 days கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மதுக்கரை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரின் வீடும் காலியிடமும் உள்ளது. சிவசுப்பிரமணியன் தனது காலியிடத்தை சுற்றி 22 அடி உயர தடுப்புச்சுவரை 80 அடி நீளத்திற்கு கருங்கல்லால் எழுப்பி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தடுப்புசுவர் அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, ஏபியம்மாள், குருசாமி உள்ளிட்டோரின் வீடுகள் இருந்தன.

நேற்று அதிகாலை பெய்த கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகள் மீது விழுந்தது. அதிக எடையுள்ள கருங்கல் சுவர் விழுந்ததால் மண் மற்றும் ஓட்டு வீடுகளான இந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு திரண்ட மக்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், சுவரை எழுப்பிய சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கூடுதல் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரையும் கைது செய்த போலீசார், கோவை மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான 24 பேரையம் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Comments