ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்! - தேர்தலுக்கு முன்பே அனைத்து இடங்களையும் விலைக்கு வாங்க திட்டம்

புகார் திருச்சி: அதிமுக பெண் எம்எல்ஏ கணவர் போட்டியிடும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் போனதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய இரு தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெறவில்லை. இந்த நிலையில் சில ஊராட்சிகளில் பதவிகள் ஏலத்துக்கு போவதாக புகார்கள் எழுந்துள்ளன. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் வலையூர் ஊராட்சி உள்ளது.

இந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் பெயரில் ரூ 14 லட்சமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ரெங்கராஜ் பெயரில் ரூ. 10 லட்சமும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு ஆனந்த் பெயரில் ரூ2.92 லட்சம் ஏலம் விடப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகம் என்பவரிடம் அப்பகுதியினர் புகார் மனு கொடுத்தனர். வலையூர், பாலையூர், ஸ்ரீபெரம்பதூர், நெ 94 கரியமாணிக்கம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வலையூர் ஊராட்சியில் மட்டும் வியாழக்கிழமை ரகசியமாக ஏலம் விடப்பட்டுள்ளது.

அதில் தலைவர் பதவிக்கு ரூ10 லட்சமும்,துணைத்தலைவர் பதவிக்கு ரூ 3 லட்சமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 14 லட்சமும் ஏலம் விடப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது தற்போது புகார் மனுவை அப்பகுதி மக்கள் கொடுத்துள்ளார்கள்.

ஏலம் நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. இன்னும் சில இடங்களில் சீட்டு குலுக்கியும் ஏலம் நடைபெறுவதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Comments