உ.பி.யில் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு- 3,500 பேர் முன்னெச்சரிக்கையாக கைது

CAA Protest: 3,500 detained, Mobile internet suspended in 14 UP districts லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் படுதீவிரமடைந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டங்களில் பரவாமல் இருக்க 3,500 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக லக்னோவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் ஒருவர் பலியானார்.

இதனால் லக்னோ நகரமே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போராட்டங்கள் தொடராமல் இருக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,500 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். லக்னோவில் மட்டும் 200 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 14 மாவட்டங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மொபைல் எஸ்.எம்.எஸ். சேவையும் இம்மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை நாளை பகல் 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, சஹாரன்பூர், மீரட், சாம்லி, முசாபர்நகர், காசியாபாத், பரேலி, ஆசம்கார், ஆக்ரா, கான்பூர், உன்னாவ் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments