தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- 12 விடுதலைப் புலிகள் விடுதலை: சுவிஸ் நீதிமன்றம்

Swiss court rules LTTE is not a criminal organization பேர்ன்: தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும் அது குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 12 விடுதலைப் புலிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீண்டகாலம் நடைபெற்றது.

இதில் 2018-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த லுவுசான் மேல்முறையீட்டு நீதிமன்றம், விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினாலும் தங்களது இயக்கத்தின் அங்கீகாரத்துக்கான போராட்டம் அது. ஆகையால் குற்ற அமைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்ததது. இத்தீர்ப்பு விவரம், நீதிமன்றத்தின் அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரில் 12 விடுதலைப் புலிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் வெளிநாடு செல்ல இலங்கை நீதிமன்றம் தடை இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் கடந்த மாதம் 25-ந் தேதி கடத்தப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் பாஸ்கேல், ஊழியர் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளை இலங்கை அரசு தாமதப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும் மர்ம நபர்களால் கடத்தி விடுவிக்கப்பட்ட பெண் ஊழியர் விசாரணை செய்வதற்கான மனநிலைக்கு இன்னமும் திரும்பவில்லை எனவும் சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதர் கருணாசேக ஹெட்டியராச்சியும் சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக சுவிஸ் தூதரக பெண் ஊழியர் விளக்கம் தர வேண்டும் என்றும் டிசம்பர் 9-ந் தேதி வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிப்பதாகவும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்த சிஐடி போலீஸ் அதிகாரி நிசாந்த சில்வா, இலங்கையைவிட்டு தப்பி சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments