உ.பி.,யில் கலவரம்: பலி 11 ஆக உயர்வு

லக்னோ : உ.பி.,யில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமுற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, போலீசாரின் தடையை மீறி, நாடு முழுவதும் நேற்றும் ( டிச., 20) போராட்டம் நடந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், பல பகுதிகளில், மொபைல் போன் வழி இணையசேவை முடக்கப்பட்டது. அலிகார் உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்று போராட்டம் வெடித்தது.

கோரக்பூர், பிரோசாபாத், அலிகார், முஜாப்பர் நகர், புல்சந்தார், பரூக்காபாத், பதோரி, மீரட், சுல்தான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. கோரக்பூரில், போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் கலைத்தனர். பல இடங்களில் தடியடியும் நடந்தது.

மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில், இது வரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் காயமுற்றனர்.

Comments