ப. சிதம்பரம் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது.. தலைமை நீதிபதி போப்டே முதல் நாளே அதிரடி

என்ன தவறு டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை அவசரமாக, உடனே விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில்தான் ப. சிதம்பரம் சிக்கி உள்ளார்.

இந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டு தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 15 நாள் விசாரணைக்கு பிறகு, ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்தது விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். ப. சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனாலும் இவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

கடைசியாக நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஆனால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் இந்த மேல்முறையீட்டு மனுவில், ப. சிதம்பரம் தரப்பு டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள குறைகளை எடுத்து காட்ட இருக்கிறது. மொத்தம் டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பில் இரண்டு தவறுகள் இருக்கிறதாம்.

அதன்படி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி தனது தீர்ப்பில் அப்படியே அமலாக்கத்துறை வாசகத்தை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது அமலாக்கத்துறை வாசகத்தை அவர் தனது தீர்ப்பை வழங்கும் வாசகமாக ஒரு வரி மாறாமல் பயன்படுத்தி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் நீதிபதி கைத் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி இதில் ஒட்டி இருப்பதாகக் புகார் எழுந்துள்ளது. டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த வருடம் நடந்த வழக்கு ஒன்றின் வாசகங்களை நீதிபதி பயன்படுத்தி உள்ளது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் இருந்த சில வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் இதில் இடம்பெற்றுள்ளது.

அதில் இருக்கும் வாசகங்களை அப்படியே வெட்டி நீதிபதி இதில் பயன்படுத்தி உள்ளார். இந்த இரண்டு தவறுகளும் இன்று உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட உள்ளது. இதேபோல்தான் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் ப. சிதம்பரம் வழக்கின் வரிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த மனுவை அவசரமாக, உடனே விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தெரிவித்துள்ளார். ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற ப. சிதம்பரம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Comments