
இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் கூறுகையில் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நானும் ரஜினியும் இணைய அவசியமேற்பட்டால் இணைவோம் என்றார்.
அது போல் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமலுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் இணைவோம். மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம் என ரஜினி தெரிவித்திருந்தார்.
இரு கட்சிகளும் தனித்தனியே தேர்தலை சந்தித்தால் இரு கட்சிகளின் தலைவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதே இருவரும் இணைவது என்ற சூழலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்த ஒரு கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியா வருகை தந்தார்.
அப்போது அவர் கூறுகையில் மாற்று அரசியலை முன்னெடுக்க இரு பெரும் பிரபலங்களும் இணைய வேண்டும் என்றால் இணையலாம். அதே சமயத்தில் என்னை பொருத்தவரையில் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர்.
அவருக்காக நாங்கள் தேர்தல் களப்பணியாற்றுவோம். ஒருவேளை கட்சித் தலைமை, நிர்வாகிகள் இணைந்து வேறொரு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தினாலும் அவர்களுக்காக பணியாற்றுவேன் என ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
Comments